டெல்லி: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் பதற்றத்துடன் தொடர்கிறது. ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகி வருவதால், பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி நகரம் பதற்றமான சூழலில் உள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கு பதிலடியாக போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் 16 முக்கிய மெட்ரோ நிலையங்களை மூடியுள்ளது. நேற்று முதல் தொடங்கிய இந்த மூடல் இன்றும் தொடர்கிறது. லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், பட்டேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரம மார்க், பராகம்பா ரோடு, உச்சநீதிமன்றம், சேவா தீர்த், ஜன்பத், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரட்டேரியட், ஐ.டி.ஓ., டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிய நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
எனினும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் நிலையங்களில் இன்டர்சேஞ்ச் வசதி மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பை கருத்தில் கொண்டு பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நீட் தேர்வு கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்தப் போராட்டம் நாடு தழுவிய அளவில் விரிவடைந்து வரும் நிலையில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
