ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீதான ஈரானின் அச்சுறுத்தலை குறைக்கும் வகையில் அமெரிக்கா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் அமைத்துள்ள டிரோன் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. நேற்று இரவு 13-வது நாளாக இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஈரான் முயற்சித்து வருகிறது. இதற்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆனால், அமெரிக்கா இந்தப் பகுதியில் முன்பு போர் தொடங்குவதற்கு முந்தைய சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நிலையை மீட்டெடுக்க விரும்புகிறது.
ஈரான் இதற்கு சம்மதிக்காததால், கப்பல்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், ஈரான் தரப்பில் ஒரு கடுமையான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “எங்களால் எண்ணெய் விநியோகம் செய்ய முடியவில்லை என்றால், எந்த நாடும் செய்ய முடியாது” என அது மிரட்டல் விடுத்துள்ளது. இதனிடையே, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் செங்கடலில் இரண்டு கப்பல்களைத் தாக்கியுள்ளனர். என்செலியா (Encelia) மற்றும் லேய்லா (Layla) என்ற அந்தக் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்பு குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஹவுதிகள் மீண்டும் தாக்கினால், அவர்களை ஈரானின் பிரதிநிதிகளாகவோ பினாமி அமைப்புகளாகவோ கருதி, ஈரான் மீதும் ஹவுதி மீதும் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார். பாப் எல்-மண்டெப் (Bab el-Mandeb) ஜலசந்தியையும் ஹவுதிகள் மிரட்டி வருகின்றனர். அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்த இந்த ஜலசந்தி செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் முக்கியச் சாவடியாகும்.
உலக வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் இந்த வழியாகவே நடைபெறுகிறது. சவுதி தொடர்பான கப்பல்களை முற்றுகையிடுவோம் என ஹவுதிகள் முன்னதாக அறிவித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. ஹார்முஸ் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஏற்கெனவே 100 டாலரைத் தாண்டியுள்ளது. செங்கடல் தாக்குதல்களால் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் இந்தப் பதற்றம் தொடர்ந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
