நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ நிர்வாகிகளுடன் இன்று பிற்பகல் மத்திய அரசு நடத்திய 2-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
டெல்லி அரசியலமைப்பு மன்றத்தில் (Constitution Club) நடைபெற்ற இச்சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது அவசியம் அல்லது அவரை பதவி நீக்க வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்|றன.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினரின் கோரிக்கைகள் அனைத்தையும் முழுமையாகக் கேட்டறிந்தோம். நாளை மீண்டும் 3-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட சோனம் வாங்சுக்
இதனிடையே, மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக 26 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் வேண்டுகோளை ஏற்றுத் தனது போராட்டத்தை முறைப்படி நிறைவு செய்தார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் அவர் பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். சோனம் வாங்சுக் விரைந்து குணமடைய விரும்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொடரும் போராட்டம் & மெட்ரோ கட்டுப்பாடுகள்
சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதை வரவேற்பதாகத் தெரிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, அதேவேளையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். அசம்பாவிதங்களைத் தவிர்க்க டெல்லியில் புதுடெல்லி ரயில் நிலையம், ஜண்டேவாலான் உள்ளிட்ட 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வினாத்தாள் கசிவைத் தடுக்கக் கடுமையான புதிய சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
