மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணையமைச்சராகப் பணியாற்றி வந்த ரவ்நீத் சிங், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், ரவ்நீத் சிங்கின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75(2) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வரும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாகப் பணியாற்றவும், மாநில அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்தவும் ரவ்நீத் சிங் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. மத்திய அமைச்சரவையில் நீடிக்க அவருக்கு மீண்டும் மாநிலங்களவை வாய்ப்பு வழங்கப்படாத சூழலில், தனது சொந்த மாநிலமான பஞ்சாப்பில் கட்சிப் பணிகளை மேற்கொள்ள அவர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பெயந்த் சிங்கின் பேரனான ரவ்நீத் சிங், நீண்ட காலம் காங்கிரசில் இருந்தவர். கடந்த 2024 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்த அவர், தேர்தலில் தோல்வியடைந்தாலும் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
