சென்னை மெட்ரோ ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், கிளாம்பாக்கம்–செங்கல்பட்டு மற்றும் அசிசி நகர்–விம்கோ நகர் ஆகிய இரண்டு புதிய நீட்டிப்பு வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.
தற்போது, சென்னை மெட்ரோ முதல் கட்டம் மற்றும் அதன் நீட்டிப்பு திட்டத்தின் கீழ் இரண்டு வழித்தடங்களில் 54 கிலோமீட்டர் தொலைவுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. நீட்டிப்பு திட்டம் திருத்தங்களுடன் 13 நிலையங்கள் மற்றும் ரூ.9,445 கோடி மதிப்பில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அந்தப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் தொடங்கப்படவுள்ளன.
இதற்கிடையில், முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக முன்மொழியப்பட்ட கிளாம்பாக்கம்–செங்கல்பட்டு வழித்தடத்தை மேலும் 27 கிலோமீட்டர் வரை நீட்டிப்பதற்கும், இரண்டாம் கட்டத்தின் 5-வது வழித்தடத்தில் மாதவரம் அசிசி நகர் முதல் விம்கோ நகர் வரை 11 கிலோமீட்டர் நீட்டிப்பதற்குமான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க சென்னை மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், விரிவான திட்ட அறிக்கையில் தினசரி பயணிகள் எண்ணிக்கை, வழித்தடம், நிலையங்களின் அமைவிடம், சிக்னல் மற்றும் மின்சார வசதிகள், தேவையான நில அளவுகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, மாற்றுத் திட்டங்கள், கட்டுமானச் செலவு மற்றும் நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப மற்றும் நிர்வாக விவரங்களும் இடம்பெறும் என்றனர்.
இரண்டு திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளும் நான்கு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நீட்டிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கிடையேயான மெட்ரோ இணைப்பு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
