நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி கட்சியினர் மற்றும் இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு எழுத்துப்பூர்வ உறுதி அளிக்காவிட்டால், மீண்டும் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்க நேரிடும் என கரப்பான் பூச்சி கட்சி அமைப்பு எச்சரித்துள்ளது.
டெல்லியில் CJP செய்தித் தொடர்பாளர்கள் ஆசுதோஷ் ரான்கா தலைமையில் நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும், புதிதாக வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டதாக CJP செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை அரசு வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைக்குள் (இன்று) அரசு எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கத் தவறினாலோ அல்லது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கத் தவறினாலோ, மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுக்கப்போவதாக CJP எச்சரித்துள்ளது.
போராட்டம் வாபஸ் பெறப்பட்ட போதிலும் பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாகவும், இது பேச்சுவார்த்தை வாக்குறுதியை மீறும் செயல் என்று CJP தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நீட் முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய அரசின் வாக்குறுதிகளை ஏற்று CJP அமைப்பு தனது 36 நாள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
