ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் மற்றும் யாஷ் வீர் சிங் ஆகிய மூவரும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
பலத்த காற்று வீசியதால் போட்டி வீரர்களுக்கு சவாலாக இருந்த நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 76.28 மீட்டர் மட்டுமே எறிந்தார். பின்னர் இரண்டாவது முயற்சியில் 79.61 மீட்டர் எறிந்து தகுதிச்சுற்றில் 5-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தகுதி உறுதியானதால் மூன்றாவது முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை.
இந்தியாவின் யாஷ் வீர் சிங், முதல் முயற்சியில் 73.89 மீட்டர் எறிந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி முயற்சியில் 78.36 மீட்டர் எறிந்து 10-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
ரோகித் யாதவ் முதல் முயற்சியில் 77.04 மீட்டர் எறிந்தார். இரண்டாவது முயற்சியில் 78.37 மீட்டர் எறிந்து 9-வது இடத்தைப் பிடித்த அவர், இறுதிப்போட்டிக்கான தகுதியை உறுதி செய்ததால் மூன்றாவது முயற்சியைத் தவிர்த்தார்.
இலங்கையின் ருமேஷ் பதிரகே 82.84 மீட்டர் எறிந்து தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்தார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 81.29 மீட்டருடன் 2-வது இடமும், தென்னாப்பிரிக்காவின் டோவ் ஸ்மிட் (80.64 மீட்டர்), இங்கிலாந்தின் பென் ஈஸ்ட் (80.38 மீட்டர்) ஆகியோரும் 80 மீட்டரைக் கடந்தனர்.
பாகிஸ்தானின் ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் அர்ஷத் நதீம், 78.63 மீட்டர் எறிந்து 7-வது இடத்துடன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இதன் மூலம், இந்தியாவின் நீரஜ் சோப்ரா (5-வது இடம்), ரோகித் யாதவ் (9-வது இடம்), யாஷ் வீர் சிங் (10-வது இடம்) ஆகிய மூவரும் பதக்கச் சுற்றான இறுதிப்போட்டியில் விளையாட உள்ளனர்.
இறுதிப் போட்டிகள் இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 12.45 மணிக்கு நடைபெறுகிறது.
