தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட உள்ளது. புதிய அரசு, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த முக்கிய சேவைத் திட்டத்தை வேறு பெயரில் செயல்படுத்த தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
திமுக ஆட்சியில் 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்தது. ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத அவர்களது வீடுகளுக்கே சென்று அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் ரேஷன் ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்து வருகின்றனர். இத்திட்டம் மூத்தோருக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ‘நான் முதல்வன்’, ‘விடியல் பயணம்’, ‘முதல்வர் காலை உணவு திட்டம்’ போன்றவற்றின் பெயர்கள் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தாயுமானவர் திட்டமும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இதனை முன்னெடுத்து, திட்டத்தின் புதிய பெயரை “முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்” என்று அறிவித்துள்ளார். இந்த மாற்றம் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு வட்டாரங்கள் கூறுகையில், “திட்டத்தின் நோக்கமும் செயல்பாடும் மாறாது. பெயர் மட்டுமே மாற்றப்படுகிறது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை மையப்படுத்தி திட்டம் தொடரும்” என்றனர்.
இந்த மாற்றம் தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மூத்தோர் பயன்பெற்று வரும் நிலையில், பெயர் மாற்றம் மட்டுமின்றி, விநியோகத் தரத்தை மேம்படுத்தவும் புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
