தஞ்சாவூர் மாவட்டம் தளிகை கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம ஐயனார் கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சுற்றுவட்டார கிராம மக்களின் முக்கிய குலதெய்வமாக விளங்கி வருகிறது.
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இங்கு நடைபெறும் கிடா வெட்டு திருவிழா மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த ஆண்டும் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ பிரம்ம ஐயனார் கோவில் முன்பு பிரம்மாண்டமான முறையில் கிடா வெட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் சுமார் 1008 கிடாக்களை பலியிட்டு வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பிரம்மாண்டமான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த தடபுடலான விருந்திற்காக சுமார் 40 ஆயிரம் கிலோ ஆட்டுகறியும் 20 ஆயிரம் கிலோ அரிசியில் சாப்பாடும் தயார் செய்யப்பட்டன.

இந்த திருவிழாவின் மிக முக்கியமான மற்றும் வினோதமான அம்சம் என்னவென்றால், இந்த கிடா வெட்டு விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் பெண்களுக்கு இதில் அனுமதி இல்லை.

இந்த பாரம்பரிய திருவிழாவை முன்னிட்டு தளிகை கிராமம் முழுவதும் தற்பொழுது விழாக்கோலம் பூண்டுள்ளது.
