தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தகவல் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை திமுக அரசு நடத்தும் என்று அதற்கான முன்னெடுப்பு பணிகளை செய்தனர். ஆனால் அதன் பிறகு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்தாமல் விட்டுவிட்டனர்.
அதன் பிறகு கூட்டுறவு சங்கங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் காலியாக உள்ளது. இதனால் பால் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் இல்லாததால் அரசு அதிகாரிகளை மட்டுமே அனைத்து கேள்விகளையும் குறைகளையும் கேட்க வேண்டியுள்ளது. சங்கங்களின் உறுப்பினர்கள் இருந்தால் அவர்களை விவசாயிகள் நேரடியாக அணுகி பிரச்சனைகளை தீர்வு காண முடியும். இது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜிடம் கேட்டபோது,
”தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பிறகு கூட்டுறவு சங்கங்களில் உள்ள போலி உறுப்பினர்கள், மறைந்த உறுப்பினர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் மாதம் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த தமிழக வெற்றிக் கழக அரசு திட்டமிட்டு இருப்பதாக” தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்க தேர்தலை தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் விற்பனை சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த விற்பனை சங்கம், வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சங்கங்கள் மூலம் சுமார் 2 லட்சம் பேர் இதில் தேர்வாகி பணியாற்ற உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
