தமிழ்நாட்டில் குடிநீர் ஆதாரங்களைப் பலப்படுத்தவும், அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யவும் ₹340 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜூன் மாதம் முதல் வழக்கத்தை விட மழைக்குறைவு பதிவாகியுள்ளது. 20 மாவட்டங்களில் 19% முதல் 59% வரையிலும், செங்கல்பட்டு மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 60%-க்கும் குறைவாகவும் மழை பெய்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. பழைய ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாருதல், புதிய கிணறுகள் அமைத்தல், பழுதடைந்த மின் மோட்டார்கள் மற்றும் குழாய்களை மாற்றுதல், தட்டுப்பாடு உள்ள இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகித்தல் போன்ற பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹134 கோடியில் பணிகளை விரைந்து முடித்து, ஆகஸ்ட் 15-க்குள் விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளவும், ஆட்சியர்கள் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் ஆய்வுக் கூட்டம் நடத்தி குடிநீர் நிலவரத்தைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
