கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாட்டு அணை திட்டத்தை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் கண்ணாடி மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரேமலதா விஜயகாந்த் ஒகேனக்கல்
பிலிகுண்டுலு சென்று நீர்வரத்தை பார்வையிட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு காவிரி நீர் தடையின்றி கிடைக்க வேண்டும், மழை பெய்ய வேண்டும், தமிழகமும் கர்நாடகாவும் பயனடைய வேண்டும் என இயற்கை அன்னையை வேண்டி, காவிரி ஆற்று நீரை பாட்டிலில் பிடித்து வந்து ஆற்றில் மீண்டும் ஊற்றி பிரார்த்தனை செய்தார்.
மேகதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் என ஆர்பாட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. கர்நாடக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து மதிக்காமல் செயல்படுவதாகவும், இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை உருவாகும் என்றும் பேச்சாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேகதாட்டு அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கர்நாடக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாய அமைப்பினர் திரளாக பங்கேற்றனர். திமுக கூட்டணி சார்பில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பெ.பழனியப்பன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
