தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் பொதுப் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
2026-27 ஆம் ஆண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை நாளை (புதன்கிழமை) நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த நாள் வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவார். இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம், அமைச்சர்களின் பதிலுரைகள் மற்றும் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும். இந்தக் கூட்டத்தொடர் சுமார் ஒன்றரை மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் 18 அன்று கவர்னர் உரையுடன் தொடங்கிய 17-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், நன்றித் தீர்மான விவாதத்துக்குப் பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது பட்ஜெட் அமர்வுக்காக சட்டசபை மீண்டும் கூடுகிறது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல புதிய அறிவிப்புகள் இந்த முதல் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500, ஆண்டுக்கு ஆறு இலவச எல்பிஜி சிலிண்டர்கள், திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, ₹20 லட்சம் வரை கல்விக் கடன், குடும்பத்திற்கு ₹25 லட்சம் மருத்துவக் காப்பீடு, இலவச முழு உடல் பரிசோதனை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உள்ளிட்டவை முக்கியமாகக் கருதப்படுகின்றன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவைகளில், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15 அன்று தொடங்கப்படும் என்றும், 200 யூனிட் இலவச மின்சாரம் ஒரு மாதத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், ₹75,000 வரையிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். மீதமுள்ள வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறும் எனக் கருதப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் விரிவாகப் பரிசீலிக்கப்படும். தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இது மக்கள் நலத் திட்டங்களுக்கான அடித்தளமாக அமையும் எனக் கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.
