தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு முந்தைய ஆட்சியின் டெண்டர் நடவடிக்கைகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால், மாநிலத்தின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் பெருமளவில் முடங்கியுள்ளன. நிதிப் பற்றாக்குறை, பழைய திட்டங்களின் விரிவான ஆய்வு மற்றும் புதிய டெண்டர் விதிமுறைகளில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் காரணமாக நெடுஞ்சாலைத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி முகமை (சிஎம்டிஏ) உள்ளிட்ட முக்கியத் துறைகள் புதிய பெரிய டெண்டர்களை வெளியிடாமல் காத்திருக்கின்றன.
இதனால் சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் ஆகியவை மோசமான நிலையில் உள்ளன. நெடுஞ்சாலைத் துறையின் தன்ஷா அமைப்பு, புதிய அரசு பதவியேற்றதிலிருந்து பெரிய அளவிலான நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் அல்லது சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு டெண்டர் விடவில்லை.
சிறு பழுதுபார்ப்பு மற்றும் ஒட்டுவேலைகளுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆற்காடு சாலை, வேளச்சேரி-தாம்பரம் முதன்மைச் சாலை, கோயம்பேடுக்கு அப்பால் உள்ள பூந்தமல்லி உயர்சாலை ஆகியவை மிக மோசமான நிலையை எட்டியுள்ளன. வடபழனி நூறு அடி சாலை மற்றும் பூந்தமல்லி உயர்சாலையில் பல மழைநீர் வடிகால்கள் பாதியிலேயே திறந்தவெளியாக விடப்பட்டுள்ளன. துறை அதிகாரிகள், முந்தைய அரசின் சுமார் 40 முக்கியத் திட்டங்கள் தற்போது தீவிர ஆய்வில் இருப்பதாகவும், ஒப்பந்ததாரர்களுக்கு மூலப்பொருள் கிடைப்பு மற்றும் நில எடுப்பு சிக்கல்களைத் தீர்க்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சாலைகளின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தும் புதிய விதிகளுடன் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.நெல்சன் மாணிக்கம் சாலை சுரங்கப்பாதை உள்ளிட்ட முக்கிய சுரங்கப்பாதைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மதுரவாயல், அம்பத்தூர், போரூர், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் சாலைகள் பெரிய பள்ளங்களுடன் காட்சியளிக்கின்றன. நகரம் முழுவதும் சுமார் 100 கி.மீ. தூரத்திற்கான மழைநீர் வடிகால் இணைப்புகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளன. மாநகராட்சி சமீபத்தில் வெளியிட்ட 232 டெண்டர்களில் பெரும்பாலானவை சிறு பழுதுபார்ப்புப் பணிகளுக்கானவை மட்டுமே.
நிதி நெருக்கடியில் உள்ள மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரி ஒருவர், “முந்தைய ஆட்சியில் முறையான நிதி ஒதுக்கீடு இன்றி அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முடங்கியுள்ளன. இனிவரும் திட்டங்கள் முறையான நிதி ஒப்புதலுடன் மட்டுமே செயல்படும். ஆகஸ்ட் 15க்குப் பிறகு பணிகள் வேகம் பெறும்” என்றார். ₹4,500 கோடி மதிப்பிலான வட சென்னை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பணிகளையும் சிஎம்டிஏ நிதிப் பற்றாக்குறையால் தள்ளி வைத்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்திலும் பார்கள் மேலாண்மைக்கான டெண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உடனடித் தேவைகளாக, சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சாலைகளைப் புதிதாக அமைக்க வேண்டியுள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்குள் விடுபட்ட 115 மழைநீர் வடிகால் இணைப்புகளைச் சரிசெய்ய வேண்டும். வெள்ளப் பெருக்கைத் தடுக்க 30க்கும் மேற்பட்ட முக்கியக் கால்வாய்களை உடனடியாகத் தூர்வார வேண்டிய கட்டாயம் உள்ளது.
அரசின் மறுஆய்வு நடவடிக்கைகள் விரைந்து முடிந்து, உள்கட்டமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டால் மட்டுமே வரவிருக்கும் மழைக்காலத்தில் சென்னை மக்கள் பாதிப்பிலிருந்து தப்ப முடியும் என்பதே நிபுணர்களின் கருத்து.
