காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தாதது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க அனுமதி கோரி, திமுக எம்.பி டி.ஆர். பாலு, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். அந்த நோட்டீஸில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை என்றும், இதனால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேகதாது அணைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் காவிரி நீர் பிரச்சினை மேலும் தீவிரமடையும் என்றும், டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அவசர மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த முக்கிய பிரச்சினையை மக்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து உடனடியாக விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று டி.ஆர். பாலு தனது நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார்.
