பெண் பத்திரிகையாளரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தெஹல்கா (Tehelka) இதழின் நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, இந்த வழக்கில் கோவா அமர்வு நீதிமன்றம் 2021-ஆம் ஆண்டு வழங்கிய விடுதலை தீர்ப்பை ரத்து செய்த பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வு, தருண் தேஜ்பாலை குற்றவாளி என அறிவித்தது.
2013 நவம்பரில், கோவாவில் தெஹல்கா இதழ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியின் போது, பெண் பத்திரிகையாளரை ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தருண் தேஜ்பால் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், 2013 நவம்பர் 23-ஆம் தேதி கோவா காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது.
முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 30-ஆம் தேதி கோவா குற்றப்பிரிவு போலீசார் தருண் தேஜ்பாலை கைது செய்தனர்.
பின்னர், 2014 ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், அவர் நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், 2021-ஆம் ஆண்டு கோவா அமர்வு நீதிமன்றம், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தருண் தேஜ்பாலை விடுவித்தது. அப்போது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவர் வெளிப்படுத்தக்கூடிய இயல்பான நடத்தையை புகார்தாரர் வெளிப்படுத்தவில்லை என்ற கருத்தை நீதிமன்றம் பதிவு செய்திருந்தது.
ஆனால், அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வு, அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, தருண் தேஜ்பாலை குற்றவாளி என அறிவித்தது.
தண்டனை அறிவிக்கப்படும் முன், தனது வயது மற்றும் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு கருணை காட்ட வேண்டும் என்று தருண் தேஜ்பால் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
எனினும், நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தருண் தேஜ்பால் தெரிவித்துள்ளார்.
