தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தல் கும்பல் ஆவணங்கள் இல்லாமல் பல்வேறு பொருட்களை கடத்தி வருகின்றன இதை தடுக்க க்யூ பிரிவு காவல் துறை மற்றும் கடலோர காவல் நிலைய போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதி அருகே உள்ள அண்ணா காலனி கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அண்ணா காலனி கடற்பகுதியிலிருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு 8 வெள்ளாடுகள் மற்றும் நான்கு பெட்டிகளில் புறாக்கள் ஆகியவை கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளாடு மற்றும் புறாக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர்படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.
வழக்கமாக இலங்கைக்கு அதிக அளவில் பீடி இலைகள் மஞ்சள் மாத்திரைகள் பட்டாசு அழகு சாதன பொருட்கள் ஆகியவை கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வெள்ளாடு புறா ஆகியவற்றையும் கடத்தல் கும்பல் கடத்த துவங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
