சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மேகதாது அணை திட்டம் மற்றும் காவிரி நீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானங்களை தாக்கல் செய்தனர். சபாநாயகர் பிரபாகர் அவற்றை ஏற்றுக்கொண்டார்.
தீர்மானத்தின் மீது பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி நதிநீர் பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏன் நடத்தப்படவில்லை என்றும், முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுவது உண்மையா என்றும் கேள்வி எழுப்பினார். மேகதாது திட்டம் குறித்தும் தமிழ்நாட்டின் நலன் பாதிக்கப்படாதவாறு உறுதியான நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பியதாகவும், நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் முழுமையான விவரங்களை வெளியிடாததால் அடுத்த நாளே அனுமதி வழங்கக் கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார்.
காவிரி பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியாக கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நினைத்ததாகக் கூறிய அவர், “பெங்களூரு செல்ல விரும்பியது நான்தான். அண்டை நாடுகளுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்கும்போது, அண்டை மாநிலங்களுடன் பேசிப் பார்ப்பதில் தவறில்லை. அவமானம் நேர்ந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக அதைத் தாங்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
மேலும், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என உறுதியளித்த முதல்வர், இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் விரிவான விளக்கம் அளிப்பார் என்றும், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை முழுமையாகப் பின்பற்றினால் உண்மை தெரியும் என்றும் குறிப்பிட்டார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழ்நாட்டின் நீர் உரிமை பாதுகாக்கப்படும் என்பதும் அரசின் நிலைப்பாடாக உள்ளது.
