ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய நிலையில், அந்தத் தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமெனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.
அமெரிக்காவின் தாக்குதலில் காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருவதாகவே தகவல்கள் வெளியாகின. மொஜ்தபா கமெனியின் பெயரில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியாகி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்நிலையில், இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 வெளியிட்ட செய்தியில், மொஜ்தபா கமெனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், எந்த நேரத்திலும் அவர் உயிரிழக்கக்கூடும் என்ற தகவல்கள் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் அமைச்சரவைக்கு நெருக்கமான வட்டாரங்கள், “மொஜ்தபா கமெனி விரைவில் மரணமடைந்த செய்தி வந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை” என்று குறிப்பிட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, உச்ச தலைவர் மொஜ்தபாவுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக அதிபர் பெசெஷ்கியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலைமை ஈரானின் அரசியல் மற்றும் இராணுவ உயர்மட்டத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தலைமை மாற்றத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த உடல்நிலை சிக்கல், நாட்டின் உள்நாட்டு நிர்வாகம் மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அதேநேரம் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
