பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நேற்று (07.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் அதிக அளவில் கூடும் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உயர்தர இலவச வைஃபை வசதியை ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சியை முன்னிறுத்தி, மக்களுக்கு எளிதாகவும் தடையின்றியும் சேவைகளை வழங்கும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் மற்றும் திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகள், பல்வேறு பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களில் இலவச வைஃபை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்கள் மூலம் உயர்தர இணைய இணைப்பை எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஏர்டெல், ஜியோ, ஹாத்வே மற்றும் ஏசிடி உள்ளிட்ட முன்னணி இணைய சேவை வழங்குநர்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், அமைப்பு முறைகள் மற்றும் செயல்பாட்டு விவரங்கள் குறித்து விவாதித்தனர். ஆணையாளர் சமீரன், திட்டத்தை விரைவாகவும் தரமாகவும் செயல்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த இலவச வைஃபை வசதி, சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத்தை மக்கள் மையப்படுத்திய அணுகுமுறையுடன் இணைத்து, சென்னையை மேலும் டிஜிட்டல் நகரமாக மாற்றும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள், இணைய சேவை நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து, விரைவில் இத்திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
