தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது.
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்று அறிக்கை ஒன்றில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நடைபெறும் இந்த பேரணி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவுபெற்றது. இந்திய ராணுவத்தின் வீரத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் மாநில அரசு சார்பில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
இதனிடையே இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நாட்டின் பாதுகாப்பு நலனுக்கு நாம் எப்போதும் துணை நிற்போம் எனக் கூறினர்.