“நான் முதலமைச்சர் ஆவதற்கு அரசியலுக்கு வரவில்லை” என்று தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் கமல்ஹாசன், பின்புலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். திமுகவுடனான இந்த ஒப்பந்தம் நிறைவேற அரசியலில் ஆக்டிவ் ஆகிறார் என்று பேச்சு எடுபடும் நிலையில், அவருக்கு புதிய அசைன்மென்ட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
களத்தில் கமல்ஹாசன்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற தமது கட்சியைத் தொடங்கி, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார். தனித்துப் போட்டியிட்டுக் கனிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றதால் மக்கள் நீதி மய்யம் 2021 சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட்ட கமல்ஹாசனும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் பல விமர்சனங்களுக்கு உள்ளானார் கமல்ஹாசன். கமல் பகுதிநேர அரசியல் செய்கிறார் எனக் குற்றஞ்சாட்டி அவர் கட்சியின் முக்கியத் தலைவர்களே விலகிச் சென்றனர். கமலும் விக்ரம், இந்தியன் 2, தக் லைஃப் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்.
கூட்டணிக் கூடாரத்தில் மய்யம்
இதன் பின் வந்த 2024 மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாமல், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி, மநீமவுக்கு வழங்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தார் கமல்ஹாசன். அதற்கு முன்புவரை திமுக அரசையும் தாக்கிப் பேசிவந்த கமல்ஹாசன், ஒரேடியாக தம் விமர்சனங்களை அதிமுக, பாஜகவை நோக்கித் திருப்பினார். இதுவும் அவரது கொள்கைகள் மீது பெரும் விமர்சனங்களைச் சம்பாதித்தது.
தோற்றுப்போன அரசியல்வாதி?
இதற்கிடையில், கடந்தாண்டு மநீம பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய கமல், “என்னைத் தோற்றுப்போன அரசியல்வாதி ஆக்கிவிட்டீர்களே” என்று ஒட்டுமொத்த பழியையையும் நிர்வாகிகள் மீது திருப்பினார். “பூத் கமிட்டிக்கு குறைந்தபட்சம் 5 பேரையாவது நியமிக்க கெஞ்ச வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டதே” என்று வருத்தப்பட்டார். “முழுநேர அரசியல்வாதி என்று யாரும் கிடையாது” என்று பேசி வரும் கமல்ஹாசனுக்கு, “பகுதி நேர அரசியல் மிக ஆபத்தானது” என்று அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து, அதை அரசியலுக்காக கமல்ஹாசன் பயன்படுத்தியும் பலனளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அதனால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் துறந்துவிட்டார் என்று பேச்சு அடிபடுகிறது.
மீண்டும் ஆக்டிவ்
இந்நிலையில், தக் லைஃப் திரைப்பட வேலைகளும் முடிவடைந்த நிலையில், கமல் மீண்டும் முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் தக் லைஃப் படம் வெளியானதும், மீண்டும் தீவிர அரசியலில் இறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் விக்ரம், இந்தியன் 2 ஐ தொடர்ந்து தக் லைஃப் இசைவெளியீட்டு விழாவில் ”நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் தெரியுமா” என்ற சமாளிப்பை போகிற போக்கில் உதிர்த்துக் கடந்திருக்கிறார். ஜூலையில் எம்.பி ஆனதும் மநீம சார்பில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தப் போவதாகவும், தம்ழ்நாடு முழுவதும் கமல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக அசைன்மென்ட்
2026 சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக இயங்குவார் என்று கூறப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒப்பந்தம் நிறைவேற வேண்டுமென்றால் விஜய்க்கு எதிரான வலுவான அஸ்திரமாக கமல்ஹாசன் மாற வேண்டும் என்று திமுக சார்பில் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது. அதனால்தான் அண்மையில் நடந்த மநீம 8-ம் ஆண்டு விழாக் கூட்டத்தில் பேசிய கமல், விஜய்க்கு மறைமுகமாக அறிவுரை ஒன்றை வழங்கி, உரசலைக் கிளப்பியிருக்கிறார். “திரைத்துறையிலிருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் ரசிகர்கள் வேறு, தொண்டர்கள் வேறு என்பதை நான் அனுபவித்துத் தெரிந்துகொண்டேன்” என்று கமல் கூற, “ஓய்வு எடுப்பது போல் அரசியல் பக்கம் வந்து போனால் அப்படித்தான் இருக்கும்” என்று தவெக கொடுத்திருக்கிறது.
தவெகவில் ஏற்கெனவே புகையைக் கிளப்பியிருக்கும் கமல், கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை முடித்து மாநிலங்களவை உறுப்பினராக சோபிப்பாரா என்பதைக் காலம் காட்டும்.
