கோவை, கந்தேகவுண்டன்சாவடி (க.க. சாவடி) அரசு உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முருகனுக்கு எதிராக பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
அங்கு பயிலும் மாணவிகளை தவறான முறையில் தொடுதல், ஜாதி அடிப்படையில் பேதப் பிரிவு செய்து நடத்துதல் போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதாக புகார்கள் கூறப்படுகின்றன.
இந்தச் சம்பவம் மாணவர்கள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பள்ளியில் 11 வயதுடைய மாணவி, 6 ம் வகுப்பில் படித்து வருவதாகவும், அங்கு பணியாற்றும் முருகன் ஆசிரியர் அந்த மாணவியிடம், நீங்கள் எல்லாம் குப்பை வேலைக்குத் தான் தகுந்தவர்கள் என அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், சகோதரனின் தலைமுடியை பிடித்து மேஜையில் அடித்ததாகவும் தெரிவித்து உள்ளார். மேலும், நீங்கள் படிப்பது சரியில்லை என கூறி தனியாக வகுப்பறையில் கதவின் ஓரத்தில் உட்கார வைத்ததாகவும், மாணவி கூறி உள்ளார்.
இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் அளித்ததோடு, கோவை மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து மனு அளித்து உள்ளனர்.
மாணவர்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு இத்தகைய செயல்கள் தீங்கு விளைவிக்கக் கூடியவை என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், புகார் அளித்தால் அவ்வளவு தான் என மாணவிகளை மிரட்டி உள்ளாராம் அந்த ஆசிரியர் முருகன். இது மாணவியரின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது என பெற்றோர் கவலை தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்து உள்ளனர்.