சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அன்னதான உணவு, விருந்து போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சாம்பார், ரசம், பாயாசம், அப்பளம், கூட்டு உள்ளிட்ட பல பதார்த்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சபரிமலை சந்நிதானத்தின் மாளிகாபுரம் கோயிலுக்குப் பின்னால் அன்னதான மண்டபம் உள்ளது. மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து இங்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை உப்புமா, கொண்டைக் கடலை குழம்பு, சட்னி, சுடு தண்ணீர் வழங்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மசாலா கலவை சாதம், பருப்பு குழம்பு, ஊறுகாயும், இரவு உணவாக மாலை 6.45 மணி முதல் கோயில் மூடப்படும் வரை கஞ்சி மற்றும் வாழைக்காய், தட்டாம்பயறு கூட்டும் வழங்கப்படுகிறது.
தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு உணவருந்தி வருகின்றனர். இந்த உணவு வெளிமாநில பக்தர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. எனவே ‘விருந்து பாணியில்’ அன்னதானம் வழங்கப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்தது. ஆனால் இரண்டு முறை அறிவித்தும் உணவு மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி முதல் அன்னதான உணவில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி சாப்பாடு, பருப்பு சாம்பார், ரசம், அவியல், ஊறுகாய், அப்பளம், கூட்டு, பாயாசம் ஆகியவற்றுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.
மண்டல வழிபாடு தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் சில நாட்களில் நடை சாத்தப்பட உள்ளது. ஆரம்பத்திலே இதுபோன்ற அன்னதானம் வழங்கி இருந்தால் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன்பெற்று இருப்பர். டிச.27-ல் நடை சாத்தப்பட நிலையில் கடைசி நேரத்தில் உணவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஒருநாள் விட்டு ஒருநாள் தான் இந்த உணவு என்பது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.
