கடன் வாங்கி விட்டு பின்னர் அதை அடைப்பதற்குள் படும்பாடு இருக்கிறதே… அது வார்த்தைகளால் சொல்லி விட முடியாத ஒன்று. கடன் பிரச்சினை தீர தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்க வேண்டும்.
செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி வருவது சிறப்பான நாள் இன்றைய தினம் பைரவருக்கு அரளிப்பூ மாலை சாற்றி வழிபட தீராத கடனும் தீரும் என்பது நம்பிக்கை. வாழும் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆனால் இந்த காலத்திற்கு கடன் இல்லாத வாழ்க்கையே சிறப்பான வாழ்க்கை என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. தொழில் செய்வதாக இருந்தாலும் சரி, குடும்ப முன்னேற்றத்திற்காக இருந்தாலும் கடன் வாங்காமல் எதையும் செய்ய முடியாத நிலை.
இன்று நடுத்தர மக்கள் மட்டுமின்றி பெரும் பணக்காரர்கள் வரை வாட்டி வதைப்பது கடன் பிரச்னைதான். பணப்பிரச்னை என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்து விடுகிறது. ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது. இதில் சுபவிரயமும், அசுபவிரயமும் அடக்கம்.
மகன், மகள் கல்வி செலவு, பிள்ளைகள் திருமணம், வியாபாரம், தொழில், வழக்குகள், ஆடம்பர வாழ்க்கை, மருத்துவ செலவுகள் என பல விஷயங்கள் நம்மை கடனாளி ஆக்குகிறது. ஜாதக பலம் உள்ளவர்கள் இதில் இருந்து மீண்டு வந்துவிடுகிறார்கள். சிலர் கடன் தொல்லையால் தவறான முடிவுகளுக்கு சென்று விடுகிறார்கள். சொத்துக்களை இழந்து தெருவுக்கு வரும் அளவுக்கு கிரகங்கள் ஆட்டிப் படைக்கின்றன.
“பதவி பூர்வ புண்ணியானாம்” என்ற முக்கியமான வார்த்தைக்கு ஏற்ப, நம்முடைய இந்த பிறவி பயன், பலன் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தை பொறுத்தே அமைந்துள்ளது. ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியமானதாகும். இந்த ஸ்தானத்தில் இருந்துதான் மற்ற கிரக அமைப்புகளை மேற்கோள் காட்டுகிறோம்.
லக்னம் 1 வது இடம். அடுத்த வீடு தனஸ்தானம் எனும் 2 வது இடம். என்பது போல், 6 வது இடம் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்பதாகும். ருணம் என்றால் கடன். ரோகம் என்றால் வியாதி. சத்ரு என்றால் எதிரி. இந்த ஆறாமிடமும், ஆறாம் அதிபதியே மேற்கண்ட செயல்களை ஏற்படுத்தக் கூடியவர் எனலாம்.
கடன் வாங்கி விட்டு பின்னர் அதை அடைப்பதற்குள் படும்பாடு இருக்கிறதே… அது வார்த்தைகளால் சொல்லி விட முடியாத ஒன்று. தொழில் தொடங்க கடன், மருத்துவ செலவுகளுக்கு, குடும்பத் தேவைக்கு என்று அவசரத்தில் கடன் பெற்று விட்டு பின்னர் அதிக வட்டியால் அல்லல் பட்டு, அவமானப்பட்டு தலைகுனிந்து நிற்கும் நிலைதான் ஏற்படுகிறது.
இந்த கடனால் வட்டி கட்டி மீள முடியாமல் தவிப்பவர்கள் படும்பாடு வார்த்தையால் சொல்லி மாளாது. உயர்வான வாழ்க்கைக்கு என்று பாடுபட்டு உழைக்கும் பணம் கடனுக்கும், வட்டிக்கும் செல்வதால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் அவமானங்களால் பலர் பல நேரங்களில் விபரீத முடிவுகூட எடுத்துள்ளனர்.
கடன் பிரச்னையால் தவிப்பவர்கள் நிம்மதியான வாழ்வு வாழவும் கொடுத்த கடன் திரும்பி கிடைக்கவும், நலிந்த தொழில் மீண்டும் கொடிகட்டிப் பறக்கவும், வீழ்ச்சி அடைந்தவர்கள் விரைவில் வளர்ச்சி அடையவும், செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி நாளில் நாளில் கால பைரவரை வழிபட வேண்டும்.
ஈஸ்வரனை வழிபட்டால் பாவங்கள் விலகும். லட்சுமிகுபேரன் அல்லது திருவோண பெருமாளை வழிபட்டால் செல்வம் குவியும். இந்த இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெற வேண்டுமெனில், நாம் சொர்ண கால பைரவரை வணங்க செல்வம் பெருகும் கடன் பிரச்சினை நீங்கும். சிவ ஆலயங்களுக்கு சென்று செவ்வாரளி மாலை சாற்றி, மிளகு தீபம் ஏற்றி வழிபட கடன் பிரச்சினை படிப்படியாக குறையும்.