காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் வெகு விமர்சையாக தொடங்குகியது. வரும் 10-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா மாங்கனி இரைத்தல் நடைபெற உள்ளது.

காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இந்த விழாவின் ஒருபகுதியாக கடந்த 7-ந் தேதி பரமதத்த செட்டியாருக்கும் புனிதவதியாருக்கும்
திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று மாலையே ஸ்ரீ பிக்ஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடந்தேறியது.

வரும் 10-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ பிக்ஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம்
தீபாரதனை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து வேதபாராயணத்துடனும், வாத்தியங்கள் முழங்கவும் திருவீதியுலா வருவார். அப்போது பக்தர்கள் பிச்சாண்டவர் மீது மாங்கனிகளை வீசி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.

11-ந் தேதி பரமதத்த செட்டியாரும், இரண்டாவது மனைவியும், மகளும் எதிர் வந்து ஸ்ரீ புனிதவதியாரை வலம் வந்து வணங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து புனிதவதியார் ஊனை உதிர்த்து பேயுருக்கொண்டு அற்புதத் திருவந்தாதி திருவிரட்டை மணிமாலை பாடிக்கொண்டே கயிலாயத்திற்கு சென்று அடைதல் அரங்கேறும்.

Share.
Leave A Reply

Exit mobile version