நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் 2026 மே மாதத்தில் 3.2 சதவீதம் உயர்ந்து ரூ.1.94 லட்சம் கோடியை கடந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.88 லட்சம் கோடியாக இருந்தது.
மத்திய ஜிஎஸ்டி (CGST) வசூல் ரூ.37,397 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (SGST) வசூல் ரூ.45,143 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) வசூல் ரூ.51,990 கோடியாகவும் பதிவாகியுள்ளது. உள்நாட்டு பொருட்களின் வரிக்குட்பட்ட விநியோகம் 26.9 சதவீதமும், சேவைத் துறையின் வரிக்குட்பட்ட பரிவர்த்தனைகள் 22.2 சதவீதமும் உயர்ந்துள்ளன. இது நாட்டின் உள்நாட்டு நுகர்வு மற்றும் தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதை காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இறக்குமதிகளின் மீதான ஐஜிஎஸ்டி வசூல் 19.1 சதவீதம் அதிகரித்து ரூ.59,654 கோடியாக உயர்ந்துள்ளது. இது தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளின் விரிவாக்கத்தைக் காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மே மாதத்தில் ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.27,281 கோடியாக இருந்தது. இதனை கழித்தபின் நிகர ஜிஎஸ்டி வருவாய் 3.3 சதவீதம் உயர்ந்து ரூ.1.67 லட்சம் கோடியாக உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.4.37 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட 6.2 சதவீதம் அதிகமாகும். இந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி மூலம் ரூ.10.19 லட்சம் கோடி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து உயர்வது, இறக்குமதி மற்றும் உள்நாட்டு நுகர்வு அதிகரித்திருப்பதையும், உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதையும் வெளிப்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
