’லவ் டுடே, டிராகன்’ பட ஹிட்டைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறைந்த பட்ஜெட்டில் அவர் நடிக்கும் படங்கள் 2கே கிட்ஸ்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பிரதீப் வளர்ந்து வருகிறார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காதல் இன்சூரன்ஸ் கம்பெனி” மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ”டியூட்” போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ’டியூட்’ படத்தில் பிரதீப் நடித்து வருகிறார். மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான், டியூட் தலைப்பு தன்னுடையது என நடிகரும், இயக்குநருமான தேஜ் கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
”ஒரு வருடத்திற்கு முன்பே ’டியூட்’ படத்தை அறிவித்து விட்டோம். மைத்திரி மூவி மேக்கர்ஸ் அவர்களின் படத்திற்கு எங்கள் பெயரை வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மைத்ரி போன்ற ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை எதிர்த்துப் போராடும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இந்த விஹயத்தை ஏற்கனவே அவர்களிடம் தெரியப்படுத்தி விட்டேன். அவர்களிடம் இருந்து நல்ல பதிலை எதிர்ப்பார்ப்பதாக” தேஜ் தெரிவித்துள்ளார்.
தேஜ் ’டியூட்’ என்ற தலைப்பில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளதும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.