தமிழ் திரையுலகைக் காப்புரிமை விவகாரம் பெருமளவில் பாதித்து வருகிறது. தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தும் ஒவ்வொரு இயக்குனர், தயாரிப்பாளர் மீதும், இளையராஜா இந்தக் காப்புரிமை கணையைத் தவறாமல் தொடுத்து வருகிறார். தற்போது, அவரது முன்னாள் நண்பரான கவிஞர் வைரமுத்துவும் அவருடன் சேர்ந்துகொண்டு, ”என்னிடம் தெரிவிக்காமல், என் பாட்டு வரிகளைக் கொண்டு படங்களுக்கு பெயர் வைத்துக் கொள்வது நியாயமா?” என்று ஆதங்கப்பட்டுள்ளார். வைரமுத்து ஏன் இப்படிச் செய்கிறார்?
சினிமாவில் ஓரங்கட்டப்படும் வைரமுத்து?
1980 களிலிருந்து கவிஞர் வைரமுத்துவால் தமிழ் திரைப்படப் பாடல்களின் புதிய சகாப்தம் உருவானது. தமிழ் இலக்கியத்தின் ஆழமும், மண் மணம் மாறாத கிராமிய பாடல்களின் எளிமையும், உயர்தர கவிதையும் வைரமுத்துவின் பாடல்களில் எதிரொலித்தன. அவை அன்றைய ரசிகர்களின் பாடல்களில் தீராக் கொண்டாட்டங்களாக மாறிப் போயின. இளையராஜா – வைரமுத்து இணை பல வெற்றி பாடல்களைக் கொடுத்தது. பின்னர், இளையராஜா உடனான நட்பு முறிந்ததும், வைரமுத்துவுக்கு தேவா, வித்யாசாகர், ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டோர் கிடைத்தனர். இவர்களின் கூட்டணியும் வைரமுத்துவை 2010 வரை தமிழ் திரைப்பாடல் உலகில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றி இருந்தது. ஆனால் வைரமுத்துவுக்கு அப்போதிருந்த புகழும் வாய்ப்பும் இப்போதில்லை. குறிப்பாக, மணிரத்னம், ஷங்கர் போன்ற பிரம்மாண்ட இயக்குனர்களுக்கு எழுதிவந்த வைரமுத்துவுக்கு இப்போது வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இளம் இயக்குனர்களால், பல சமயங்களில் அவரது சம்பளம் காரணமாக அவரை நெருங்கக்கூட முடிவதில்லை என்று கூறப்படுகிறது. அவ்வப்போது ஓரிரு படங்களில் தற்போது எழுதி வருகிறார். அவரது இந்த நிலைமைக்கு பாடகர் சின்மயி எழுப்பிய பாலியல் சீண்டல் குற்றச்சாட்டும் காரணமாக பார்க்கப்படுகிறது.
இலக்கியத்தில் கோலோச்சும் வைரமுத்து!
திரையுலகில் அவ்வளவாக வாய்ப்புகள் வருவதில்லை என்றாலும், இலக்கிய உலகில் தனக்கென உள்ள தனி இடத்தை, வைரமுத்து தொடர்ந்து காப்பாற்றி வருகிறார். குறிப்பாக திமுக ஆட்சியில் வைரமுத்துவின் இலக்கிய நதி, எவ்வித தடையுமின்றி செழித்து ஓடுகிறது. அண்மையில், தனியிசைப் பாடல்களாக அவர் எழுதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ’நாட்படு தேறல்’ தொகுப்பு, அவரது மகா கவிதை புத்தக வெளியீடு, வைரமுத்தியம் என்ற பெயரிலான கருத்தரங்கு, தற்போது வெளியாவுள்ள திருக்குறளுக்கு அவர் எழுதியிருக்கும் உரை என இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். மேலும், அவ்வப்போது நேர்காணல்களில் தோன்றி, தான் எழுதிய பாடல் வரிகளின் கதைகளைக் கூறி, மக்களை சுவாரஸ்யப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமது பாடல் வரிகளில் இருந்து திரைப்பட தலைப்புகளை வைத்துக் கொண்டவர்கள் ஒரு நாகரிகத்துக்காவது என்னிடம் தெரிவிக்காமல் செய்கிறார்களே என்று தற்போது ஆதங்கப்பட்டுள்ளார்.
திரைப்படத்தில் பெயரின் முக்கியத்துவம்
பொதுவாக, 2-3 சொற்களுக்குள் படத்தின் கதைகளம், காட்டப்படும் உணர்ச்சி, அதனால் ஏற்படும் விளைவு போன்றவற்றைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்துடன் திரைப்படங்களின் பெயர்கள் வைக்கப்படுகின்றன. உலக திரைப்படங்களின் பாணியே இதுதான் எனும்போது படைப்புகளின் நெடும் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழில், தலைப்புகள் முக்கியவம் பெறுகின்றன. பல நேரங்களில், இயக்குநரையோ, நாயகர்களையோ சுட்டும் அடைமொழியாகப் படங்களின் பெயர்கள் மாறிப்போகின்றன. இத்தகைய தன்மை கொண்ட திரைப்படப் பெயர்கள் பெரும்பாலும் கவிதை வரிகளிலிருந்து பெறப்படுவதும் உண்டு. அச்சம் தவிர், நிமிர்ந்து நில், கன்னத்தில் முத்தமிட்டால், போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் அப்படி பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயர்களாக கொண்டுள்ளன. அதன் வரிசையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் உள்ளிட்ட எத்தனையோ கவிஞர்களின் பாடல், கவிதை வரிகளும் பின்னாட்களின் படங்களின் பெயர்களாக மாறியுள்ளன. அந்த வரிசையில் வரும் வைரமுத்து, தமது புதிய சொல்லாடல்களால் ஈர்க்கிறார்.
திரைப்படப் பெயராக ஏன் வைரமுத்து வரி?
ஒரு பாடலின் முதல் வரி என்பது, ஒட்டுமொத்த ரசனையையும் உள்ளடக்கிக் கவர்வதாக இருக்க வேண்டும். அதற்குள் அன்றாடம் பயன்படுத்த முடிந்த எளிமையும், சொல்ல முடியாத உணர்ச்சியைக் கடத்த வேண்டிய வலிமையும் இருக்க வேண்டும். வைரமுத்துவின் பெரும்பாலான பாடல்களின் முதல் வரிகள் அப்படிப்பட்டவை. பாட்டின் முதல்வரியில் புதிய சொல்லாக்கத்தை வைப்பது என்று திரைப்பாடல்களின் புதிய இலக்கணத்திற்கு வித்திட்டவர் வைரமுத்து. அவர் எழுதி, அவரே குறிப்பிட்டிருப்பது போல் பொன்மாலைப் பொழுது, இளைய நிலா, பனிவிழும் மலர்வனம், ஈரமான ரோஜாவே, மௌன ராகம், தென்மேற்குப் பருவக்காற்று போன்ற வரிகள் அத்தகைய தன்மை கொண்டவை. சுருங்கிய சொற்களுக்குள் விரிவான கருத்தாழத்தை, கதையைச் சொல்லத் தகுந்தவை. இதனாலேயே அவரது பாடல் வரிகள் திரைப்படங்களின் பெயர்களாகப் பயன்படுத்தப்படுகிறன.
வைரமுத்துவின் ஆதங்கம் சரியா?
தன் பாடல் வரிகளை கேட்காமல் பயன்படுத்துகிறார்கள் என்று வைரமுத்து ஆதங்கப்பட்டாலும், அதற்கான காப்புரிமையைக் கேட்டு அவர் குரல் கொடுக்கவில்லை. பயன்படுத்தக் கூடாது என்று ஒரேயடியாகக் கண்டிக்கவும் இல்லை. ”என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்யலாமே” என்று கேட்கிறார். வைரமுத்து கேட்பது முற்றிலும் நியாயமானது. எந்தவொரு படைப்பாளனின் படைப்பிலிருந்து நாம் ஒன்றை எடுத்துக் கொள்ள முனையும்போது அதன் தகவலை உரியவருக்குத் தெரிவிக்க வேண்டியது தார்மீகக் கடமை. அதன்படி வைரமுத்து கேட்பது சரியே.
மறுபுறம், சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர் கபிலன் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் அவரிடம் “உன் சமையலறையில் என்று உங்கள் திரைப்பாடல் வரியைப் படம் பெயர் ஆக்கியிருக்கிறார்களே” என்று கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு “என்னிடம் கேட்காமல்தான் படம் பெயர் வைக்கப்பட்டது. அதிலொன்றும் பிரச்னை இல்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்த வரியைக் கொடுத்த கவிஞனை அந்தப் படத்தில் பாட்டெழுத வைக்கலாமே” என்று கருத்து தெரிவித்தார். வைரமுத்துவும் அதற்குத்தான் அடிபோடுகிறாரா? இல்லை தம் நண்பர் இளையராஜாவின் பாணியை முயல்கிறாரா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.