பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் சாதனை வசூலுடன் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. சூர்யாவிற்கு இதுவொரு மிகச்சிறந்த ‘கம்பேக்’ படமாக அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருவதால், அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், படத்தின் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை பிரபல பாக்ஸ் ஆபீஸ் இணையதளமான Sacnilk வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘கருப்பு’ திரைப்படம் நேற்று முதல் நாளில் இந்தியாவில் மட்டும் மொத்தம் ரூ.16.66 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ.4 கோடி வசூலாகியுள்ள நிலையில், உலக அளவில் ஒட்டுமொத்தமாக முதல் நாளிலேயே ரூ.20.66 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது.
படம் பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருவதாலும், இன்றும் நாளையும் (சனி, ஞாயிறு) வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதாலும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், முதல் நாள் வசூலைவிட இனிவரும் நாட்களில் ‘கருப்பு’ படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என சினிமா வட்டாரங்கள் கணித்துள்ளன.
