சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு, தனது சொந்த செலவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய கான்கிரீட் கட்டிடத்தை நடிகர் தனுஷ் கட்டிக் கொடுத்துள்ளார்.

தனுஷ் பத்தாம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில்தான் கல்வி பயின்றார். அங்கு ஏற்கனவே இருந்த மேற்கூரை அமைக்கப்பட்ட பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டிடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், அங்குப் பணியாற்றிய தனது முன்னாள் ஆசிரியர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், அவருடன் பயின்ற 1999-ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்கள், தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா மற்றும் பள்ளி நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தனுஷுடன் படித்த சக மாணவரும், ‘வேலையில்லா பட்டதாரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளருமான குமரன் கலந்துகொண்டு பேசுகையில், “பள்ளியின் பழைய கட்டிட நிலை குறித்துத் தெரிந்ததும், தனுஷ் உடனடியாக முன்வந்து இந்தப் புதிய கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். மேலும், தேவைப்படும் பிற வசதிகளையும் செய்து தருவதாகக் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version