தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ்விற்கு ரூ.102 கோடி அபராதம் விதித்து புலனாய்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
விக்ரம் பிரபு நடித்த வாகா படத்தில் நடித்திருந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து திரும்பி வரும்போது பெங்களுரூவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டார். அதில், ரன்யா ராவ்விடம் 14 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் பல்வேறு வெளிநாடுகளில் பயணம் செய்த ரன்யா ராவ் அங்கிருந்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனால் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான டிஜிபி கேடரில் இருந்த ராமச்சந்திர ராவ், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், தங்க கடத்தல் வழக்கை விசாரித்து வரும் வருவாய் புலனாய்வுத்துறை கைதாகி சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்தா விட்டால் ரன்யா ராவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ரன்யா ராவ் உடன் சேர்ந்த மேலும் 3 பேருக்கு ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.