மனம் திறந்து பேசுவதாக செங்கோட்டையன் அறிவித்ததை தொடர்ந்து அவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டணியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி பங்கேற்று ஆதரவு அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வரும் 5 ஆம் தேதி காலை 9 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளதாகவும், அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து கோபியில் உள்ள  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைப்பெற்றது. 18 ஒன்றிய செயலாளர்களில் 16 ஒன்றிய செயலாளர்களும், நகர செயலாளர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பவானி சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி பங்கேற்றுள்ளார்.

அதிமுக தலைமையில் அதிருப்தி இருக்கும் செங்கோட்டையனுக்கு பண்ணாரியின் ஆதரவு இருப்பது கட்சியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனுக்கு ஆதரவு பெருகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்காமல் மூடப்பட்ட அறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version