தமிழ்சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் அதர்வா. இவரது ஒரு ஒரு படங்களும் வித்தியாசமான கதைக் களத்தில் அமைந்திருக்கும். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில் தற்போது முதன் முறையாக அதர்வா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’நான், அமரக்காவியம், எமன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஜீவா சங்கரின் ’வலை’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் அதர்வா. இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “ “ராமேஸ்வரத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த திரைப்படம் சரா மற்றும் குட்டி என இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் அதர்வா முரளி நடித்துள்ளார். முழுக்க முழுக்க மீனவர் சமூகத்தின் வாழ்க்கை முறையை பேசும் படமாக இல்லாமல், பழிவாங்கல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூபா மஞ்சரி மற்றும் வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கு முன்பு ராமேஸ்வரம் பின்னணியில் பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார்.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. அதர்வா சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் முதன்முறையாக அவர் இரட்டை வேடத்தில் நடிப்பதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
