தமிழ் மட்டுமின்றி இந்திய திரையுலகில் பாலியல் ரீதியான பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனை வெளியில் சொல்பவர்கள் மிக மிக குறைவு. அவ்வாறு சொன்னால் அவர்களுகான வாய்ப்புகள் குறையும். அப்படி ஒதுக்கப்பட்டவர் தான் பாடகி சின்மயி.

முறைப்படி கர்நாடக சங்கீதம் படித்தவர், சிறுவயது முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடியுள்ளார். தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் சின்மயி. இந்தப் பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பாடல்களை பாடியதோடு, பல ஹீரோயின்களுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் புகாரை தொடர்ந்து வைரமுத்துவுக்கு வாய்ப்புகள் குறையத்தொடங்கியது. அதேப் போல சின்மயிகும் அடுத்தடுத்து பிரச்னைகள் ஏற்பட்டது. டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்ற காரணத்தினால் அவர் டப்பிங் பேச தடை விதிக்கப்பட்டது. அதேப் போல பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

வைரமுத்து மீது எழுப்பிய புகார் காரணமாகத்தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாக சின்மயி கூறி வந்தார். தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் பாடியும், டப்பிங் கொடுத்தும் வந்தார் சின்மயி. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார் சின்மயி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவர் பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

சின்மயிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என கோலிவுட்டில் அவருக்கு ஆதரவாக கருத்துகள் பரவ தொடங்கியது. இந்த நிலையில் தான், டி.இமான் இசையில் சின்மயி பாடி இருக்கிறார். இது குறித்து இமான் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், ரெக்கார்டிங் தியேட்டரில் சின்மயியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்தோடு ”என்றும் ஆன்மாவைத் தொடும் சின்மயியின் குரல் மீண்டும் ஒரு மாயாஜாலத்தை உருவாக்குகிறேன். என் மனதிற்கு நெருக்கமான ஒரு மெல்லிசைப் பாடல்” என பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version