பாமகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணி கூற, முடியவே முடியாது என ராமதாஸ் கூற இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. இதற்கிடையே ராமதாஸ் மகன்வழி பேரனான முகுந்தனுக்கு பதவி கொடுப்பதில், அன்புமணிக்கு உடன்பாடு இல்லை. பாமகவின் பொதுக்குழுவின் போதே இருவரும் மேடையிலேயே ஒருவருக்கொருவர் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

இது நான் ஆரம்பித்த கட்சி: நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் : உடன்பாடு இல்லை என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளுங்கள் என பகிரங்கமாக அறிவித்தார். அதே மேடையில் பனையூரில் தனியாக அலுவலகம் திறந்திருப்பதாக அறிவித்தார் அன்புமணி. இந்த மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்க, அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கினார் ராமதாஸ்.

சட்டமன்ற தேர்தல் வரை நான் தலைவராக இருப்பேன்: அதன்பிறகு வேண்டுமானால் அன்புமணி தலைவராக இருக்கட்டும் எனக் கூறியவர் திடீரென என் உயிர்மூச்சு இருக்கும் வரை நான் தான் கட்சி தலைவர் என்றார் ராமதாஸ். அவர் கட்சியிலிருந்து நீக்கியவர்கள் அப்பதவியிலேயே நீடிப்பார்கள் என்றார் அன்புமணி. நாளுக்கு நாள் இந்த குழப்பம் நீடித்துக் கொண்டே செல்ல, தான் புதிதாக நியமித்த மாவட்ட செயலாளர்களுடன் நேற்று (14.06.2025) தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார் ராமதாஸ்.

இந்த நிலையில் பாமக பொதுச்செயலாளராக புதிய நபரை நியமித்துள்ளார் ராமதாஸ். ஏற்கனவே பொதுச்செயலாளராக இருந்த வடிவேலு ராவணனை நீக்கிவிட்டு, முரளி சங்கர் என்பவரை நியமித்துள்ளார். இதுவரை 60 மாவட்ட செயலாளர்கள், 39 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version