நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. பொங்கலை ஒட்டி இந்தாண்டு ஜனவரி மாதமே இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சென்சார் பிரச்னையில் படம் சிக்கியது. சென்சார் சான்றிதழ் பெறாததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இன்று வரையில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. சென்சார் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இதற்கிடையில் இப்படம் இணையதிதில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் இந்தப் படத்தை இணையம் வழியே பார்த்து அதற்கான ரிவியூவை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்தப் படம் ஓடிடியில் பெரும் தொகைக்கு விற்பனையானது. ஆனால் படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியாத நிலையில், ஓடிடி உரிமையையும் வாங்கிய நிறுவனம் ரத்து செய்துவிட்டது. இறுதியாக விஜய்யின் பிறந்தநாளுக்கு முன்பாக இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் இப்படத்திற்காக வாங்கிய பணத்தை விநியோகஸ்தர்களுக்குத் திருப்பித் தந்துவிடுங்கள் என தயாரிப்பாளர்களிடம் விஜய் சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் விநியோகஸ்தர்களுக்கு வட்டியுடன் பணத்தை திருப்பியளிக்க கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
