துபாயில் புர்ஜ் பார்க்கில் உள்ள மாலில் கடிகாரங்கள் வாரம் ( Watch Week ) நடைபெற்று முடிந்தது. கடந்த வாரம் 19ஆம் தேதி துவங்கி நேற்று 23ஆம் தேதி வரை இந்த கடிகாரங்களின் கண்காட்சி நடந்தது. இந்த கடிகார கண்காட்சியில் 90க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களின் கடிகாரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. TAG Heuer, Zenith, Hublot, Tudor, Roger Dubuis மற்றும் பலரிடமிருந்து புதிய மற்றும் உன்னதமான கடிகாரங்கள் அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சிக்கு நடிகர் தனுஷ் மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கே நடிகர் தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கடிகாரம் என்று சொன்னவுடன் உங்களுக்கு என்ன நினைவு வரும், கடிகாரங்களைப் பொறுத்தவரை தனுஷின் முதல் காதல் என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தனுஷ் “ நான் பள்ளியில் படிக்கும் போது என் அம்மா எனக்கு வாங்கிக் கொடுத்த ஒரு கடிகாரம்தான் எனக்குப் பிடித்த முதல் கடிகாரம். அது ஒரு டாலருக்கும் குறைவானது ( இந்திய ரூபாயில் 90 ரூபாய்க்கும் குறைவான கடிகாரம் ). அதில் பெயர் இல்லை, அது ஒரு பிளாஸ்டிக் டிஜிட்டல் கடிகாரம், அது நேரத்தை மட்டுமே காண்பிக்கும்.
அந்த கடிகாரத்தில் ஒரு விளக்கு இருக்கிறது. அந்த விளக்கு கடிகாரத்தின் பின்னாடி இருக்கும் பேட்டரி மூலம் எரியும்.
”நான் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வருகிறேன், எனவே பேட்டரிகள் தீர்ந்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் கடிகாரம் முடிந்துவிட்டது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கடிகாரம் முடிந்தது. அந்த மாடல் கடிகாரம் அப்பொழுது பல வண்ணங்களில் வந்தது. நானும் என் சகோதரிகளும் வயலட், மஞ்சள், பச்சை நிறங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம். அது பார்க்க மினுமினுப்பாகவும், பளபளப்பாகவும் இருந்தது.
ஆனால் பேட்டரி செயலிழந்தபோதும், நான் அந்த கடிகாரத்தை அணிந்து பள்ளிக்குச் செல்வேன். அது நேரத்தைக் காட்டுவதை ஒரு கட்டத்தில் நிறுத்தியது, ஆனால் நான் அந்த கடிகாரத்தை இன்னும் வைத்திருக்கிறேன். அந்த கடிகாரத்தை தான் நான் மிகவும் விரும்பினேன். கடிகாரங்களில் என்னுடைய முதல் காதல் என் அம்மா எனக்கு கொடுத்த அந்த கடிகாரத்தின் மீதுதான்”, என்று கூறினார்.
இந்த வாட்ச் வீக் நடப்பதற்கு முன்பாக 4113 என்ற என் சீரியஸை சேர்ந்த ரோலக்ஸ் வாட்ச் மாடல் இந்திய மதிப்பில் சுமார் 42 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போனது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ரோலக்ஸ் வாட்ச் இந்த அளவுக்கு ஏலம் போனது இதுவே முதல் முறை.
இந்த 4113 சீரியசைச் சேர்ந்த ரோலக்ஸ் வாட்ச் மாடல் 1940ஆம் ஆண்டுகளில் வெறும் 12 வாட்சுகள் தான் தயாரிக்கப்பட்டன. அதில் தற்பொழுது ஒன்பது தான் மிஞ்சி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் ரோலக்ஸ் வாட்ச் மாடல்களில் இந்த ஒரு மாடல்தான் விண்டேஜ் ஸ்பிளிட்-செகண்ட்ஸ் கால வரைபடத்தை கொண்ட வாட்ச் மாடல். அதனாலேயே தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
