தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், ஹீரோவாகவும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017-ம் ஆண்டு ’மாநகரம்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதாக போகவில்லை. அதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு கார்த்தியை வைத்து இவர் இயக்கத்தில் வெளியான ’கைதி’ திரைப்படமானது மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற டிரெண்டை உருவாக்கிய லோகேஷ் அதன் கீழ் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். இவரது அடுத்த படைப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ’கூலி’ படத்தை இயக்கி வருகிறார்.

ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களும் அவர் கைவசம் உள்ளது. இயக்கம் மட்டுமில்லாது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ். ’ஜிஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.

இதற்கிடையில் நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஜோடி சேர்ந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் லோகேஷ். வருங்காலத்திலும் ஹீரோவாக வலம் வருவாரோ என்ற ரசிகர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியாகி கொண்டு வருகின்றன. தனுஷ் நடிப்பில் வெளியான ’கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களம்காண இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்க இருப்பதால், தற்காப்பு கலையான மார்ஷல் ஆர்ட்ஸ் பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version