‘திரிஷ்யம் 3’ திரைப்படம் ரூ.200 வசூலை நெருங்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாக கலவையான கருத்துக்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக சாதனையைப் படைத்து வருகிறது.
சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இப்படம் வெளியான 58 மணி நேரத்திலேயே ரூ.100 கோடி வசூலை எட்டிப் பிடித்து சாதனை படைத்ததாக கூறுப்படுகிறது. தற்போது, இப்படம் வெளியாகி 6 நாட்கள் நிறைவடைந்துள்ளநிலையில், உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கேரளாவில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எம்புரான்’ படத்தைத் தொடர்ந்து, மிக வேகமான முறையில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த மலையாளப் படம் என்ற பெருமையை ‘திரிஷ்யம் 3’ பெற்றுள்ளது. இந்த வேகத்தில் வசூல் தொடர்ந்தால், மிக விரைவில் இப்படம் ரூ. 200 கோடி கிளப்பில் இணையும் என்றும், இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் திரையுலக வணிக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
