தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக வலம் வந்து பாடகர், நடிகர், இயக்குநர் என பல பரினாமங்கள் எடுத்தவர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் ராப் இசையை கலந்தவர் இவர். இவரது பல பாடல்களின் சில வரிகள் யாருக்குமே புரியாத வகையில் இருக்கும். அது தான் அவரது ஸ்பெஷல். அது எதனால் என அவரது பாடலிலேயே கேள்வி கேட்கப்பட்டு அதில் பதிலும் சொல்லப்பட்டு இருக்கிறது.

கன்னியாகுமரி மாவடம் நாகர்கோவிலை சேர்ந்தவர் விஜய் ஆண்டனி. சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தவர், தானே ஆடியோ பைல்ஸ் என்ற ஒலியரங்கை அமைத்து, ஒலி பொறியாளராக பணியாற்றி வந்தார். தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள், ஆவணப்படங்கள் என சில ஜிங்கில்ஸ் அமைத்தார். தொடர்ந்து சில தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்தார் விஜய் ஆண்டனி. சன் டிவியில் ஒளிப்பரப்பான ’சின்ன பாப்பா, பெரிய பாப்பா’, 2006-ம் ஆண்டு வெளியான ’கனா காணும் காலங்கள்’, 2007-ம் ஆண்டு ’காதலிக்க நேரமில்லை’ போன்ற தொடர்களுக்கு சினிமா போன்று இசையமைத்தார்.

இதில் குறிப்பாக ’காதலிக்க நேரமில்லை’ தொடருக்காக இவர் அமைத்த இசை, இன்றும் காதலர்கள் மத்தியில் ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது. அதன் பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரன் தனது ’டிஷ்யூம்’ படத்திற்கு இசையமைக்க விஜய் ஆண்டனிக்கு அழைப்பு விடுத்தார். அப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் குறிப்பாக ’டைலாமோ, டைலாமோ’ என்ற பாடல் இன்றைய இளைஞர்களையும் துல்லல் போட வைக்கும். என்னதான் டிஷ்யூம் படம் இவருக்கு முதல் படம் என்றாலும், இவரது இசையில் முதலில் திரையில் வெளியான திரைப்படம் ’சுக்ரன்’ தான்.

இந்தப் படத்தில் வெளியான பாடல்களும் ஹிட் அடிக்க அடுத்தடுத்து சினிமாவில் வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. ”நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், அ,ஆ,இ,ஈ, நினைத்தாலே இனிகும், வேட்டைக்காரன், அங்காடித் தெரு, உத்தமப் புத்திரன், அவள் பெயர் தமிழரசி, வேலாயுதம், யுவன், யுவதி, வெடி, கதை, திரைக்கதை வசனம் இயக்கம்” இப்படி இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே ஹிட் அடித்தது.

தான் இசையமைக்கும் பாடல்களில் நிச்சயம் அவரது குரலில் ஒரு பாடலேனும் இருக்கும். அவரது குரலுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். இப்படி இசையில் கலக்கி கொண்டிருந்தவர் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார். 2012-ம் ஆண்டு ஜீவா சங்கர் இயக்கத்தில் ’நான்’ என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கினார் விஜய் ஆண்டனி. இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்ததை அடுத்து, தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

2014-ல் சலீம், 2015-ல் இந்தியா-பாகிஸ்தான், 2016-ல் சைத்தான், என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த அளவு நடிகராக அவர் ஜொலிக்கவில்லை. ஹீரோவாக அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் 2016-ல் சசி இயக்கத்தில் வெளியான ’பிச்சைக்காரன்’ படம் தான். தாய் சென்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. இப்படி காமெடி, செண்டிமெண்ட் என நடித்து வந்தவர் சற்று அரசியலிலும் இறங்கிப் பார்ப்போம் என, அரசியல் சார்ந்த படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

”எமன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், கோடியில் ஒருவன்”என அரசியல்வாதியாகவும், அரசியல் சார்ந்த கதைகளையும் தேர்ந்தெடுக்க தொடங்கினார். ஆனால் அப்படியான படங்கள் அவரது பெரிய ஹிட் கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 19 படங்களில் நடித்த அவர், இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். பிச்சைக்காரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2023-ம் ஆண்டு பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்திற்கு தயாரானார் விஜய் ஆண்டனி. தானே இப்படத்தை தயாரிக்கவும் செய்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது, படகு விபத்தில் காயமடைந்தார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் நடித்த சிலரும் இந்த விபத்தில் சிக்கினர். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது. முதல் பாகத்தை இயக்கிய சசிகுமாரே இரண்டாம் பாகத்தையும் இயக்க, பிறகு ஏற்பட்ட மனக்கசப்பால் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனால் தானே முன்னின்று படத்தை இயக்கினார் விஜய் ஆண்டனி. முதல் பாகம் வெற்றி பெற்ற அளவு இரண்டாம் பாகம் சோபிக்கவில்லை.

காளி, கொலைக்காரன், தமிழரசன், ரத்தம், கொலை, வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர், ரோமியோ, காக்கி என பல படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதற்கிடையில் அவரது மகள் இறப்பும் அவருக்கு பேரிடியாக இருந்தது. 2023-ம் ஆண்டு அவரது மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலி வட்டாரத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. அதிலிருந்து மீண்டு படங்களில் தனது கவனத்தை செலுத்தினார் விஜய் ஆண்டனி.

திரையுலகில் இவரது ஈடுபாடு எவ்வளவு அதிகமோ அதேப் போல, சில அரசியல் நிகழ்வுகளின் போதோ அல்லது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளின் போது தனது கருத்தை வெளிப்படையாக கூறியும் வந்தார் விஜய் ஆண்டனி. புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்தான இவரது கருத்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேப் போல, இந்தியா-பாகிஸ்தான் இடையே தாக்குதல் ஏற்பட்ட போதும், ”பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என அவர் கூறியது பேசுபொருளானது.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. ’ஜென்டில்வுமன்’ படத்தின் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் ’ஃபிலிம் கார்பரேஷன்’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ’லாயர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நீதிமன்ற பின்னணியில் வித்தியாசமான வழக்கை மையாக வைத்து இப்படத்தின் கதை உருவாகி இருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version