“உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல” எனக் கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம். பார்ப்பதற்கு சிறப்பான தீர்ப்பு போல தோன்றலாம்.. ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று மத்திய அரசைப் போல் உச்சநீதிமன்றமும் பார்ப்பது வேதனை அளிக்கிறது.

சீனாவில் 1959-ல் புரட்சி ஏற்பட்ட போது 14-வது தலாய்லாமா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்தனர். அப்போது பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு, இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலா என்ற நகரத்தையே ஒதுக்கித் தந்தார். நாடுகடந்த அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார். கர்நாடகாவின் பைலுகுப்பே, முண்ட்கோடு, டெல்லியில் மஜ்னு-கா-தில்லி ஆகிய இடங்களில் அதிக அளவில் திபெத்தியர்கள் குடியேறினர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் உதகை, கொடைக்கானல் ஆகிய இடங்களிலும் திபெத்தியர்களை நீடக்தற்போது வரை இந்தியாவில் ஏறத்தாழ ஒரு லட்சம் திபெத்தியர்கள் வசிக்கின்றனர்.

இதுபோதாதென்று 1950 முதல் 1987-க்கு இடையில் இந்தியாவில் பிறந்த திபெத்தியர்கள் இந்தியர்களாக கருதப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பும் வழங்கி உள்ளது. ஆனால் அகதிகளுக்கான வசதிகள் கிடைக்காமல் போய்விடுவோமோ என்று திபெத்தியர்கள் குடியுரிமை வாங்காமல் உள்ளனர்.

இந்த நேரத்தில் 2019-ல் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை மீளாய வேண்டி உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட முடியாது என்று அந்த திருத்தச் சட்டம் கூறியது.

இதற்கு காரணம் கேட்கப்பட்ட போது மத்திய இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில், “இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை
( naturalisation ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது” என்றார். அதாவது இலங்கைத் தமிழர்களை அகதிகளாகக் கூட ஏற்க இந்திய அரசு மறுக்கிறது என்றுதான் பொருள்.

சீனாவுடன் திபெத் மல்லுக்கட்டும் நிலையில், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் திபெத்திற்கு இந்தியா அடைக்கலம் தந்து ஆதரிக்கிறது. ஆனால் இலங்கையை இந்தியா நட்பு நாடாக பாவிக்கிறது. அதனால் இலங்கைத் தமிழர் நிலைப்பாட்டில் மறுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. உண்மையில், இந்தியாவை இலங்கை நட்பு நாடாகத்தான் கருதுகிறதா என்றால் இல்லைவே இல்லை என்று அடித்துக் கூறலாம். 1983 தொடங்கி தற்போது வரை 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது நமது மீனவர்களின் லட்சக்கணக்கிலான மதிப்புள்ள விசைப்படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டுள்ளனர். இவர்களா நமக்கு நட்பு நாடா?

இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல், சீனாவுடன் மிகுந்த நட்பு பாராட்டி வருகிறது இலங்கை. தனது ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. ஒருவேளை இந்தியா சீனா இடையே போர் மூண்டால் தனது படைத்தளமாக இலங்கையை சீனா பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட நாட்டை நாம் நட்பு நாடாக கூறுவது எந்த விததில் சரி? இதற்காகவாவது குறைந்தபட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்க வேண்டியது நியாயமல்லவா?

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் மற்றொரு வாசகம் இடம்பெற்றுள்ளது. “”ஏற்கனவே நாட்டில் 140 கோடி மக்கள் உள்ள நிலையில், எல்லா இடங்களிலும் இருந்து வந்து இங்கு குடியேற இது சத்திரம் அல்ல, அவ்வாறு செய்யவும் இயலாது”” என கூறியுள்ளனர்.

நாட்டிற்கு இந்த கருத்து பொருந்தும் எனில், மாநிலத்திற்கும் இது பொருந்தும் என்று எடுத்துக் கொள்ளலாமா?. அதாவது ஏற்கனவே 7 கோடி பேருக்கு மேல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை உள்ளநிலையில் ஒவ்வொரு நாளும் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வந்து இறங்குகிறார்களே? இது எந்த விதத்தில் சரி?. இதனால் ஏற்படும் மொழி, கலாச்சார சீர்கேடுகளுக்கு யார் பொறுப்பு? அவர்களை உடனடியாக தத்தமது மாநிலங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று தமிழ்நாடு கூறினால் அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா?

மத்திய அரசின் முடிவுகள் தான் அரசியல் லாபநட்ட கணக்குகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளன என்றால் உச்சநீதிமன்றமும் தன் பங்கிற்கு இவ்வாறு செயல்படுவது சரியா?

Share.
Leave A Reply

Exit mobile version