அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படத்தின் தோல்விக்கான காரணங்கள் குறித்து இயக்குனர் எச்.வினோத் மனம் திறந்து தெரிவித்துள்ளார்.

2022ல் அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் எச்.வினோத், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியதற்கான காரணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு வராத ஒன்றை வலிந்து செய்யப்போய் இப்படி ஆகிவிட்டது” என்று வினோத் ஒப்புக்கொண்டுள்ளார்.

விஸ்வாசம் போன்ற குடும்பப் படங்களை இயக்குவது தனது பாணி இல்லை என்றும், ஆனால் அஜித்தின் குடும்ப ரசிகர்களைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆக்‌ஷன் மற்றும் சமூகக் கருத்துகளை ஒரே படத்தில் சமன் செய்ய முயன்றது சரியாக அமையவில்லை என்றும் வினோத் குறிப்பிட்டுள்ளார். படத்தின் மிக முக்கியமான தோல்விக்கு, சரியான கலவையில் சரியான திரைக்கதை அமையாமல் போனதே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். எழுத்தாளரின் பலம் மற்றும் பலவீனம் இதில் வெளிப்பட்டது என்றும், அஜித்தின் முந்தைய படத்தின் வெற்றியால் அந்த அம்சங்களை வலிமையிலும் இருக்க வேண்டும் என்று நினைத்தது சரியாக அமையவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு, படப்பிடிப்பில் ஏற்பட்ட நடிகர்கள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களும் படத்தின் உருவாக்கத்தைப் பாதித்ததாக வினோத் சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்த அனுபவத்தைப் பாடமாக எடுத்துக்கொண்டு, தனது அடுத்த படமான ‘துணிவு’ படத்தில் பிழைகளைச் சரிசெய்ததாகவும், அதில் 50 முதல் 60 சதவீதம் வரை தனது பாணியில் நேர்த்தியாகச் செய்ய முடிந்தது என்றும் எச்.வினோத் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version