2025-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும் நிலையில், இந்திய அளவில் மட்டும் ரூ.700 கோடியை கடந்துள்ளது. முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பாராட்டினால் திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தற்போது 2025-ம் ஆண்டில், உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற மாபெரும் சாதனையை ‘துரந்தர்’ நிகழ்த்தியிருக்கிறது. முதல் இடத்தில் இருந்த ‘காந்தாரா – சாப்டர் 1’ படத்தின் வசூலை முறியடித்திருக்கிறது. இதுவரை உலகளவில் மொத்த வசூலில் ரூ.900 கோடியை கடந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
’துரந்தர்’ ஸ்பை த்ரில்லர் வகை படமாகும். உளவு அதிகாரியை பற்றிய கதயைக் கொண்டது. 1999-ம் ஆண்டு கந்தகரில் இந்திய விமானம் கடத்தப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் டெல்லி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, ஹம்சா என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களைக் கண்டுபிடித்து எப்படி முறியடிக்கிறார் என்பது இதன் கதை.
விரைவில் ‘துரந்தர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,000 கோடி வசூலை கடக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
