பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ள நிலையில் அதிமுக – பாஜக இடையே கூட்டணித் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகளுடன் தேர்தல் சம்பந்தமாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக சென்னை வந்துள்ள பியூஷ் கோயல் முதலில் பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்திக்க எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வந்த பியூஷ் கோயலை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி வரவேற்றனர். இந்த சந்திப்பில் கூட்டணி பலப்படுத்துவது, தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி (ACS), புரட்சி பாரதம் ஆகியவை தற்போது வரை அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்.
இதற்கிடையே தான் அதிமுக கூட்டணியில் பாஜக 60 தொகுதிகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இம்முறை அதனை மும்மடங்காக கேட்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. பாஜக கடந்த முறையை காட்டிலும் இந்த முறை 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் மீதமுள்ள 20 தொகுதிகளில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 60 தொகுதிகளை கேட்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தலைமை விருப்பப்படுவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் தான் அதன் காரணமாகவே தற்போது கூடுதல் தொகுதிகளை கேட்க பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் மையக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

