சுயாதீனத் படங்களுக்கு திரையரங்குகளில் போதுமான இடம் கிடைக்கவில்லை என்பது 40 ஆண்டுகளாக எனக்குள் இருக்கும் கேள்வி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவா தலைநகர் பனாஜியில் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன. அந்த வகையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து கடந்தாண்டு வெளிவந்த ‘அமரன்’ திரைப்படம் ‘ஓபன் பீட்சர் பிலிம்’ பிரிவில் இன்று (நவ.21) திரையிடப்பட்டது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத்தினருக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி உருவான இப்படம் மிகுந்த பாராட்டுகளையும், வசூலையும் பெற்றது.
இந்நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் (ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்), இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிடோடர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது கமல்ஹாசன், சுயாதீனத் திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் போதுமான இடம் கிடைக்கவில்லை குறித்த கேள்விக்கு, ”ஆம், சுமார் 40 வருடங்களாக எனக்குள் இருக்கும் கேள்வியும் அதுதான். என்னுடைய புகாரும்கூட. சுயாதீன சினிமா இந்தியாவைப் போலவே சுதந்திரமானது. அதை கமெர்சியல் சினிமாவின் வரையறைக்குள் கொண்டு வர வேண்டாம். சுயாதீன சினிமாவை பிரதான சினிமாவைப் போல அதே வடிவத்தில் எடுக்க கட்டாயப்படுத்தக்கூடாது” என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க கோவா சென்ற கமல்ஹாசன் அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த்தை சந்தித்தார். அதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், ”இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் திரையிடப்படுவதை காண இன்று கோவாவிற்கு சென்றேன். அப்போது, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அங்கு அவர் எனக்கு அளித்த அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி கூறினேன். கோவாவின் வளர்ச்சி, குறிப்பாக மருத்துவத்துறையில் துடிப்பான முன்னேற்றம் குறித்து நாங்கள் ஒரு சுவாரஸ்ய உரையாடலை நடத்தினோம்” என குறிப்பிட்டுள்ளார்.
