பிரபல நகைச்சுவை நடிகரும், சூப்பர் குட் மூவிஸ் நிறுவனத்தின் முன்னாள் மேலாளருமான பாவா லட்சுமணன் உடல்நலக்குறைவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலதிபர் மற்றும் நடிகரான ‘லெஜண்ட்’ சரவணன் அவருக்கு உடனடியாக நிதியுதவி வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திரைத்துறையில் பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர் பாவா லட்சுமணன். குறிப்பாக, வடிவேலுவுடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுபவை. மேலும், ஆரம்பகாலத்தில் சூப்பர் குட் மூவிஸ் நிறுவனத்தின் மேலாளராகவும் திரைத்துறையில் தீவிரமாகப் பணியாற்றியுள்ளார்.
சமீபகாலமாக தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாவா லட்சுமணனின் தற்போதைய வறுமை மற்றும் அவல நிலை குறித்த தகவல் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானது. இதனையறிந்த ‘லெஜண்ட்’ சரவணன், உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளார். பாவா லட்சுமணனின் அவசர மருத்துவச் செலவுகளுக்காக ரூ. 2 லட்சம் நிதியுதவியை அவர் வழங்கியுள்ளார்.
லெஜண்ட் சரவணனின் இந்த உடனடி மனிதநேய உதவிக்குத் திரைத்துறையினரும், ரசிகர்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். பலரைத் தன் நகைச்சுவையால் சிரிக்க வைத்த பாவா லட்சுமணன், விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பழைய உற்சாகத்தோடு ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே அனைவரின் கூட்டுப் பிரார்த்தனையாக உள்ளது.

