சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது போதைப் பொருள் புழக்கம் தான். நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் மிகப்பெரிய பேசுப் பொருளாக இருந்து வருகிறது.
இதுகுறித்து மூத்த நடிகர்களும் திரைப்பிரபலங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்னும் பல நட்சத்திரங்கள் இந்த சிக்கலில் மாட்டுவார்கள் என விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், யார் போதைப் பொருட்கள் பயன்படுத்தினாலும் தவறு தான் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சித்தார்த், சரத்குமார், தேவையானி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 3பி.எச்.கே. இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், போதைப்பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சிறிய பட்ஜெட் படங்கள் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, மக்களுக்கு கனெக்ட் ஆகும் படங்கள் கட்டாயம் ஓடும் என பதில் அளித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், ‘மிஸ் யூ’ படத்தை தொடர்ந்து ‘3 பிஎச்கே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மறுபுறம் மாரிசெல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் ‘பைசன்’ படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக தனுஷின் ”டி56” என்ற படத்தை இயக்க உள்ளார்.