நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வசித்து வருகிறார். இதையடுத்து விவாகரத்துக் கோரி அவர் தொடர்ந்த வழக்கு, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ரவி மோகனின் வாழ்க்கையில் பின்னணி பாடகி கெனிஷா முக்கிய நபராக மாறினார்.
ரவி மோகன், ஆர்த்தி பிரச்னைக்குக் காரணம் கெனிஷாதான் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ரவி மோகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸில்’ கெனிஷா முக்கியப் பங்கு வகித்து வருகிறார். பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக வலம்வருவது இணையத்தில் வைரலாகி வந்தது.
குறிப்பாக, அண்மையில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கெனிஷா மேடை ஏறும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற காட்சி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார்.
இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, ‘நடிகர் ரவி மோகனின் குடும்பத்தைப் பிரிக்க வந்தவர்’ எனத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கெனிஷா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ரவி மோகன் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு ஒரு தெரபிஸ்டாக மட்டுமே தான் உதவத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பெற்றோரையும், 18 வயதில் திருமணமாகி தனது கருவையும் இழந்த வலியைச் சுமக்கும் தான் ஒருபோதும் இன்னொருவர் குடும்பத்தைக் கெடுக்க நினைக்க மாட்டேன் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், கடந்த சில நாட்களாகத் தன்னை நோக்கி வீசப்பட்ட விமர்சனங்களாலும், ஆன்லைன் கிண்டல்களாலும் மனமுடைந்து போனதாக தெரிவித்துள்ள கெனிஷா, சென்னையை விட்டு வெளியேறுவதாகவும், தனது இசை மற்றும் சிகிச்சை பணிகளை முற்றிலுமாகக் கைவிடுவதாக அறிவித்திருந்தார்,
அவரது இன்ஸ்டா பதிவில், நிஜமான அன்பையும், விசுவாசத்தையும் காட்ட இந்த உலகம் எனக்கு இடம் தரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள அவர், ‘இனி ரவி மோகன் உங்கள் வசம்’ என்று கூறி அவருடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்திருந்தார்
இந்தநிலையில், நடிகர் ரவிமோகம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டிக்கொடுத்துள்ளார். தனது விவாகரத்து விவகாரம், குடும்ப பின்னணி மற்றும் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், தனது பிள்ளைகளை நினைத்து செய்தியாளர்கள் முன்னிலையிலேயே கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
தனது திருமண வாழ்க்கை குறித்து முதன்முறையாக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை ரவி முன்வைத்துள்ளார். “எனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனிமேல் நடிக்கப்போவதில்லை; எனது புதிய படங்கள் எதுவும் திரைக்கு வராது. எனக்கு நடந்தது ஒரு பிளாக்மெயில் திருமணம். கையை அறுத்துக்கொண்டு என்னை மிரட்டித்தான் அந்தத் திருமணத்தைச் செய்தார்கள். இத்தனை காலம் என்னை ஒரு அடிமையாகவே நடத்தி வந்தார்கள்.
நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கூட என் இஷ்டத்திற்குச் சுதந்திரமாகச் செலவு செய்ய விடவில்லை. எனது சொந்தப் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு (Bank Account) கூட இல்லை. ஏற்கனவே என் மீது பல கோடி ரூபாய்க் கடன்களும், வழக்குகளும் உள்ளன; ஆனாலும் நான் எல்லோர் முன்னாடியும் சிரித்தபடிதான் வாழ்ந்து வந்தேன். சினிமா நடிகர் என்ற இமேஜ் இப்போது எனக்குத் தேவையில்லை.”
“3 எழுத்து இட்லி நடிகை என் குடும்பத்தைக் கெடுத்தார்!”
சமீபகாலமாகத் தன்னைப்பற்றி விமர்சித்து வரும் ஒரு நடிகையை, ‘மூன்றெழுத்து இட்லி கடை நடிகை’ எனக் குறிப்பிட்டுப் பாய்ந்தார் ஜெயம் ரவி. “அந்த 3 எழுத்து நடிகைதான் எனது குடும்பத்தைக் கெடுத்தார். என்னைப்பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது? 45 வயதில் நான் எப்படி அழகான பெண்களின் பின்னால் ஓட முடியும்? நான் பார்க்காத ஹீரோயின்களா? திரையில் அழகான பெண்களுடன் நடிப்பதுதான் என் வேலையே. சைபர் துன்புறுத்தலால் இன்று பல பேர் உயிரிழந்து வருகின்றனர். எனக்கு எதிராக ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆடியோ, வீடியோக்களை எடிட் செய்து வதந்திகளைப் பரப்புகிறார்கள். இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. இவர்களையெல்லாம் சட்டப்படி முடித்துவிட்டுத்தான் நான் அடுத்தகட்டத்திற்குச் செல்வேன்” என ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
‘பசங்க மேல பாசமில்லையா?’ – கண்ணீர் விட்டுக் கதறிய ரவி:
தனது பிள்ளைகளைப் பற்றிப் பேசும்போது மேடையிலேயே ரவி கண்ணீர் விட்டுக் கதறினார். “ஒரே நாளில் என்னால் விவாகரத்து செய்திருக்க முடியும். ஆனால், எனது பிள்ளைகளுக்காகத்தான் இத்தனை காலம் பொறுமையாக இருந்து அமைதி காத்தேன். இப்போது எனது பிள்ளைகளை என்னை நேரில் பார்க்கக் கூட விடுவதில்லை. பாதுகாவலர்களுடன் என் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பிள்ளைகளைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் என்னை நானே வருத்திக்கொள்கிறேன். பாசத்தைப் பற்றி யாரும் இனி என்னிடம் பேசாதீர்கள். இந்த கடுமையான மன உளைச்சலால் என்னால் தற்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை” என்று கண்ணீருடன் ஜெயம் ரவி தெரிவித்தார்.
