இந்தியாவின் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, தற்போது பான் இந்தியா ஹீரோயினாக வலம்வந்து கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ’குபேரா’ படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக ’அனிமல், புஷ்பா 2’ ஆகிய படங்களிலும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அந்தப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியான ’குபேரா’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா.
கடந்த 20-ம் தேதி வெளியான ’குபேரா’ படம் இதுவரை ரூ.50கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜூனா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நாகர்ஜூனா, ராஷ்மிகாவை புகழ்ந்து பேசினார். மூத்த நடிகை ஸ்ரீதேவியுடன் ராஷ்மிகாவை ஒப்பிட்டு பேசியிருந்தார். அதாவது “இப்படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பை பார்த்தபோது எனக்கு ”க்சண க்சணம்” படத்தில் ஸ்ரீதேவியை நினைவுப்படுத்தியது. நேஷனல் கிரஷ் என்று அவர் பெயர் பெற்றதில் ஆச்சரியமில்லை” என்றார். இதனை கேட்ட ராஷ்மிகா நெகிழ்ச்சியில் உறைந்து போனார்.